இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜூலை-13) பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு தான் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் இந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாகும். இருப்பினும், இரு நாடுகளும் டிஜிட்டல் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் சுத்தமான எரிசக்தி போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை உறுதி செய்ய உள்ளன. இதுதவிர, பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்(UPI) தொழிநுட்பத்தை பிரான்ஸுடன் இணைப்பது குறித்து இந்தியாவும் பிரான்ஸும் விவாதிக்க திட்டமிட்டுள்ளது. 2023 இல், இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது.
UPI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் முதல் ஐரோப்பிய நாடு
இந்த உடன்படிக்கை, இரு நாடுகளிலும் உள்ள பயனர்களை எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், UPI-PayNow ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டதால், இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும், மலிவு விலையிலும் எல்லைகளைத் தாண்டி தங்கள் பணத்தை அனுப்பமுடியும். இது தவிர, UAE, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளும் ஏற்கனவே இந்தியாவின் UPI கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, பிரான்ஸ் அரசாங்கம் இந்தியாவின் UPI மற்றும் பிரான்ஸின் 'லைரா'வை இணைக்க முடிவு செய்தால், UPI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் இருக்கும். அனைத்து ஒப்பந்தங்களும் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டால், பாரிஸில் வைத்து பிரதமர் மோடியே இதை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.