பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குண்டு வைத்திருந்தவர் பாதுகாப்புச் சோதனையைத் தாண்டி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது பெரும் கேள்வி குறியாக இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறை, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நடந்துள்ளதால் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நான்கு நிலை பாதுகாப்பை தாண்டி சென்ற பயங்கரவாதி
தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) என்ற சட்டவிரோத அமைப்பு, சமீபத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வன்முறை மற்றும் எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்தை இது எழுப்பியது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி, கைபர் பக்துன்க்வா(KP) போலீஸ் படையின் தலைமையகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின்(CTD) அலுவலகங்களைக் கொண்ட ஒரு கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருந்க்கிறது. தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நான்கு பாதுகாப்பு நிலைகளைக் கடந்து சிவப்பு மண்டல வளாகத்தை அடைந்திருக்கிறார். அதனால், இதற்கு பாதுகாப்பு படையில் இருக்கும் யாரவது உதவி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.