லேமினேஷன் பேப்பர் தீர்ந்துவிட்டதால் புதிய பாஸ்போர்ட்டுகளுக்காக காத்திருக்கும் பாகிஸ்தானியர்கள
புதிய பாஸ்போர்ட்டுகளை பெறுவதில் பாகிஸ்தானிய குடிமக்கள் ஒரு வினோதமான தடையை எதிர்கொண்டு வருகின்றனர் -- லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறை. பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக லேமினேஷன் பேப்பரின் பற்றாக்குறையால் நாடு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், நாடு முழுவதும் பாஸ்போர்ட் பற்றாக்குறைக்கு வழிவகுத்து உள்ளது. படிப்பு, வேலை, பொழுதுபோக்கிற்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய ஆயிரக்கணக்கானோர் இப்போது பாஸ்போர்ட் பெற போராடுகிறார்கள் என பாகிஸ்தானின் தினசரியான எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அறிக்கை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள் பலரும் இங்கிலாந்து அல்லது இத்தாலியில் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்காக தங்கள் பாஸ்போர்ட்டுக்காக காத்திருக்கிறார்கள் எனவும், அங்கீகரிக்கப்பட்ட விசாக்கள் இருந்தும், வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
"இத்தாலியில் படிக்க, எனது மாணவர் விசா சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. நான் அக்டோபரில் இத்தாலியில் இருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், பாஸ்போர்ட் கிடைக்காததால், வெளியேறுவதற்கான வாய்ப்பைப் பறித்தது" என்று ஒரு மாணவி ஹீரா கூறினார். 2013 ஆம் ஆண்டில், குடிவரவு மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (DGI&P) அச்சுப்பொறிகளுக்கு பணம் தர தாமதித்ததாலும், லேமினேஷன் பேப்பர்கள் இல்லாததாலும் அச்சிடுவதில் இதேபோன்ற தாமதத்தை எதிர்கொண்டது. பாகிஸ்தான் அரசு, பிரான்சில் இருந்து லேமினேஷன் பேப்பர்களை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருளாதார நிலையை, பாகிஸ்தான் அரசு விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக உள்துறை அமைச்சகத்தின் ஊடகங்களுக்கான இயக்குநர் ஜெனரல் காதர் யார் திவானா தெரிவித்தார்.