Page Loader
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை
கடத்தப்பட்ட ரயிலில் இருந்து மீட்கப்படும் பயணிகள்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 12, 2025
09:33 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர். மேலும் பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் மாக் நகரில் உள்ள தொலைதூர மலைப் பகுதியில் கடத்தப்பட்ட ரயிலில் பதுங்கியுள்ள ஆயுதமேந்திய போராளிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடத்தல்

பயணிகள் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்

முன்னதாக நேற்று, மார்ச் 11 அன்று, குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 400 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ்-ஐ குடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் நண்பகல் வேளையில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்துடன் (BLA) தொடர்புடைய ஆயுதமேந்திய நபர்கள் வழிமறித்து, கடத்தி சென்றனர். ரயிலில் இருந்த பாதுகாப்பு வீரர்களும் இந்த கடத்தல் தாக்குதலின் போது கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவ படையினர், தீவிரவாதிகளுடன் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 104 பயணிகளை மீட்டதாக, பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ரயிலில் இருந்து அனைத்து பயணிகளும் மீட்கப்படும் வரை சுத்தம் செய்யும் பணி தொடரும் என்று அதிகாரபூர்வ அறிக்கை மேலும் கூறியுள்ளது.

மீட்பு 

பணயக்கைதிகளை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரம்

பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பயணிகளில் சிலர் மலைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருட்டில் அவர்களைப் பின்தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பயணிகள் மற்றொரு ரயில் மூலம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு அனுப்பப்பட்டனர். ரயில் நிறுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாவட்ட காவல்துறை அதிகாரி ராணா முகமது திலாவர், ரயிலில் சுமார் நான்கு முதல் ஐந்து அரசு அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். ரயிலில் இருந்தவர்களை பற்றிய தகவல்களைப் பெற முயற்சிபவர்களுக்கு உதவ, பாகிஸ்தான் ரயில்வே பெஷாவர் மற்றும் குவெட்டா ரயில் நிலையங்களில் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.

ரயில் சேவை

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சேவைகளை பாகிஸ்தான் ரயில்வே சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியது. சமீப காலங்களில் இந்தப் பகுதியில் ரயில் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவல்ல. கடந்த ஆண்டு நவம்பரில், குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுதாரி தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 62 பேர் காயமடைந்தனர். அதன் பிறகே பாகிஸ்தான் ரயில்வே பல சேவைகளை நிறுத்தியது.