பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி
பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 பெட்டிகள் கவிழ்ந்ததால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த ரயிலில் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே இந்த ரயில் விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு நிவாரண ரயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள்ளதாகவும், அது விரைவில் வந்து சேர்ந்துவிடும் என்றும் உள்ளூர் நிர்வாகி தெரிவித்துள்ளார். "விபத்து காரணமாக, அந்த ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது" என்று ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் சுக்கூர் மஹ்மூதுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தான் ரயில்வே சுக்கூர் பிரதேச வர்த்தக அதிகாரி(டிசிஓ) மொஹ்சின் சியால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.