பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத குழு பொறுப்பேற்றுள்ளது. முதலில் அந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நடந்தன என்றும், அதன் பிறகு தாக்குதல்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் செய்திகள் கூறுகின்றன. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குவாதர் துறைமுகம் என்பது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின்(CPEC) ஒரு பகுதியாகும். இப்பகுதியில் பல தசாப்தங்களாக பிரிவினைவாத கிளர்ச்சி நடந்து வருகிறது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் அதிகம் முதலீடு செய்யும் சீனா
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதிலும், கனிம வளங்கள் நிறைந்த பலுசிஸ்தானில் சீனா அதிகமாக முதலீடு செய்துள்ளது. சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் இந்த முதலீடுகளை செய்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு இடமாகும். எனினும், பாகிஸ்தானின் மிகவும் பின்தங்கிய பகுதியாக அது உள்ளது. குறைந்த மக்கள் தொகை, போதிய நீர் இல்லாதது, மனித வள குறைபாடு மற்றும் மிகவும் மோசமான அடிப்படை கல்வி போன்ற பிரச்சனைகள் அங்கு உள்ளன. இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தை மேம்படுத்துவது உட்பட பல மேம்பட்டு திட்டங்களில் சீனா அங்கு முதலீடு செய்துள்ளது. தங்கள் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்த வளர்ச்சி திட்டங்கள் நடப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.