ஊழல் வழக்கில் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தானில் முன்னோடியில்லாத வகையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அந்நாட்டின் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஃபைஸ் ஹமீதை ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டுத் திட்ட ஊழல் தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அவர் மீது இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவான ஐஎஸ்பிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீதுக்கு (ஓய்வு) எதிரான டாப் சிட்டி வழக்கில் புகார்களின் சரியான தன்மையைக் கண்டறிய, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது." எனத் தெரிவித்துள்ளது.
பதவியில் இருந்த காலத்தில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனரல் ஃபைஸ் ஹமீத்
லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹமீத் 2019 முதல் 2021 வரை ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்தபோது மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டார். அப்போதைய ஐஎஸ்ஐ தலைவரும் தற்போதைய இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் மீது பிரதமராக இருந்த இம்ரான் கான் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு ஹமீத் நியமிக்கப்பட்டார். எனினும், பின்னர் ஹமீதை மாற்றம் ராணுவம் முடிவு செய்த நிலையில், அதற்கு இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே ராணுவம் உடனான அவரது உறவு மோசமடைய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தற்போதைய இராணுவத் தளபதி பதவியேற்ற பின்னர், ஓய்வுபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், நவம்பர் 2022இல் ஹமீத் முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.