விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான்
விக்கிபீடியா மீது போடப்பட்டிருந்த தடையை நீக்க, அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நேற்று(பிப் 6) உத்தரவிட்டார். "புனிதமானதை அவதூறாக பேசும் உள்ளடங்களை" தடுக்க/அகற்ற கோரியதற்கு விக்கிபீடியா இணங்கவில்லை என்பதற்காக அது சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் "புனிதமானதை அவதூறாக பேசுவது" என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை கடந்த காலங்களில் "அவதூறான உள்ளடக்கத்தை" கொண்டிருந்தது எனக் கருதப்பட்டதால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டன. பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் உத்தரவின் நகலை ட்வீட் செய்துள்ளார். அதில், "இணையதளத்தை(விக்கிபீடியா) உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்துவதில் பிரதமர் மகிழ்ச்சி அடைகிறார்." என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் டிராபிக் மீண்டும் அதிகரிக்கும்: விக்கிமீடியா அறக்கட்டளை
விக்கிபீடியா என்பது ஒரு இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமாகும். இது உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு திருத்தப்பட்டு வருகிறது. மேலும், இது விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. "விக்கிபீடியாவுக்கான அணுகலை மீட்டெடுக்க பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்(PTA) அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று விக்கிமீடியா AFPயிடம் கூறியுள்ளது. மேலும், "பாகிஸ்தானின் ஆன்லைன் டிராபிக் மீண்டும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்" என்றும் விக்கிமீடியா அறக்கட்டளை கூறியுள்ளது. புகாரளிக்கப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கம் அகற்றப்பட்டால் மட்டுமே விக்கிப்பீடியாவின் சேவைகளை மீட்டெடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று PTA கூறி இருந்தது. PTAவின் இந்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இதற்கு 3 அரசாங்க அமைச்சர்கள் கொண்ட குழுவையும் நியமிக்க அறிவுறுத்தி இருக்கிறார்.