Page Loader
விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு
அவர்காளுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவதூறான உள்ளடக்கத்தை அகற்றவில்லை: PTA

விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2023
08:14 pm

செய்தி முன்னோட்டம்

அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற மறுத்ததால், பாகிஸ்தான் விக்கிப்பீடியாவை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விக்கிப்பீடியா பாகிஸ்தானுக்கு இணங்காத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்(PTA) எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "புனிதமானதை அவதூறாக பேசும் உள்ளடங்களை" தடுப்பதற்காக/அகற்றுவதற்காக விக்கிபீடியாவை அணுகியதாக PTA கூறியுள்ளது. விக்கிப்பீடியா உண்மையில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரித்தபோது, ​​"ஆம்" என்று PTA செய்தித் தொடர்பாளர் ஒருவர் பதிலளித்திருக்கிறார். விக்கிபீடியா என்பது ஒரு இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியமாகும். இது உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு திருத்தப்பட்டு வருகிறது. மேலும், இது விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தான்

சட்டவிரோத உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டால் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்

ஒரு அறிக்கையை அனுப்பி குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் அகற்றுவதற்காக விக்கிபீடியாவை அணுகியதாக அந்த PTA செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அவர்காளுக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவதூறான உள்ளடக்கத்தை அகற்றவும் இல்லை அதற்கு பதிலளிக்கவும் இல்லை என்று கூறிய அவர், புகாரளிக்கப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கம் தடுக்கப்பட்டால்/அகற்றப்பட்டால் விக்கிப்பீடியாவின் சேவைகளை மீட்டெடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை கடந்த காலங்களில் "அவதூறான உள்ளடக்கத்தை" கொண்டிருந்தது எனக் கருதப்பட்டதால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் "புனிதமானதை அவதூறாக பேசுவது" என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.