இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கோவிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு, இந்திய தூதரகம் பெரும் கண்டனம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த பிரச்சனைக் குறித்து கனடா பாராளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா பாராளுன்றத்தில் கண்டனம் மற்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். "கனடாவில் அதிகரித்து வரும் இந்துவெறியால் இந்து கனேடியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். " என்று பாராளுமன்றத்தில் கூறிய சந்திரா ஆர்யா, இது ஒரு "ஆபத்தான போக்கு" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதை கண்டித்து இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டது
செவ்வாய்கிழமையன்று இது பற்றி பேசிய அவர், "கனடாவில் இந்துக் கோவில்கள் மீது இந்து விரோத மற்றும் இந்திய எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர் மீது நடத்தப்பட்டுள்ளது" என்று கூறினார். இந்திய துணைத் தூதரகம் செவ்வாயன்று கௌரி சங்கர் மந்திரில் நடந்த நாசகார வேலையைக் கண்டித்ததுடன், கோவிலை இழிவுபடுத்தியது, கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் "உணர்வுகளை ஆழமாக புண்படுத்தியுள்ளது" என்றும் கூறியுள்ளது. "இந்திய பாரம்பரியத்தின் சின்னமான பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் அவமதிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வெறுக்கத்தக்க நாசகார செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. "என்று தூதரகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.