170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன
ஒரு புதிய ஆய்வு, 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் தற்போது உலகப் பெருங்கடல்களில் மிதக்கின்றன என்று மதிப்பிடுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு, 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலினுடைய 12,000 சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம், 2005ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாடுகள் கடல்களில் அதிகரித்துள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அவசரக் நடவடிக்கை இல்லாவிட்டால், இந்த ஆண்டு முதல் 2040க்குள் கடலுக்குள் பிளாஸ்டிக்குகள் நுழையும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது
இந்த ஆய்வு PLOS ONE இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்காக பிரச்சாரம் செய்யும் அமெரிக்க நிறுவனமான 5 கைர்ஸ் இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆராய்ச்சி குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. "2005க்குப் பிறகு கடலில் பிளாஸ்டிக்கின் அளவு உயர்ந்துள்ளது. இது ஆறுகள் மற்றும் கடற்கரையோரங்களில் இருந்து பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிப்பதைக் காட்டுகிறது." என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ்(பாலிதீன் கவர் போன்றவை) குறிப்பாக கடல்களுக்கு ஆபத்தானது என்றும் இவை தண்ணீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் கடல் விலங்குகளின் உள் உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது. பெருங்கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.