அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பல்கலைக்கழக சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் சாதி ரீதியிலான பாகுபாட்டை ஒழிக்க கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல், அமெரிக்காவில் இனரீதியிலான பாகுபாட்டை தடுக்க, பல மாகாணங்களிலும், கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து வரும் சிலர், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையை இன அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இட ஒதுக்கீடு அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் சம பாதுகாப்பு விதியை மீறுவதாக கூறி ரத்து செய்தனர்.
ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு, குடியரசு கட்சியினர் ஆதரவு
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட குடியரசு கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இன பாகுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் வாய்ப்பு பெறுவதை இந்த தீர்ப்பு பாதிக்கும் என்று வேதனை தெரிவித்துள்ளார். இது போன்ற இடஒதுக்கீடு மூலம்தான் தனக்கே வாய்ப்பு கிடைத்து முன்னேறியதாக தெரிவித்துள்ள ஒபாமா, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடுத்து, சமூக சமத்துவத்திற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய நேரம் இது என வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விமர்சித்துள்ளதோடு, பத்து ஆண்டு கால முன்னுதாரணத்திலிருந்து விலகி செல்லும் நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.