சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை
செய்தி முன்னோட்டம்
"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.
'ஹெய்ல்' என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், எதிரியின் கடற்படை கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்க வல்லது என்று வட கொரியாவின் அரச செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன்னின் வழிகாட்டுதலின் கீழ், செவ்வாய் முதல் வியாழகிழமை வரை இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வட கொரியா
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கான எச்சரிக்கை
இந்த ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலின் தயாரிப்பு இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 50 சோதனைகளுக்கு இது உட்படுத்தப்பட்டதாகவும் வட கொரியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வட கொரியாவின் அணு ஆயுத சக்தியை பற்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியா உணர்ந்து கொள்வதற்கு இந்த சோதனை ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் KCNA தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய இராணுவப் பயிற்சிகள், வட கொரியாவை படையெடுப்பதற்கு தான் என்று வட கொரியா குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.