போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யாவுக்கு உதவுவது குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு மற்றும் கிழக்கில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் திறமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார். எனினும், உக்ரைனை எதிர்த்து போராட தனது படைகளை வலுப்படுத்துவதற்காக அதிக இராணுவ உதவியை ரஷ்யா நாடி வருகிறது. இந்நிலையில், வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆயுத ஒப்பந்ததிற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்(NSC) தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் கவச ரயிலில் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்லல் இருக்கிறார்
இது குறித்து பேசி இருக்கும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், "ரஷ்யாவிற்கும் DPRKக்கும்(வட கொரியா) இடையிலான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன" என்று கூறியுள்ளார். இதற்கான உயர்மட்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை கிம் ஜாங்-உன் ரஷ்யாவில் வைத்து நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போருக்கு தேவையான பலவிதமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு ரஷ்யா ஏற்கனவே வட கொரியாவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது. மேலும், ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கு ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு இந்த மாத இறுதியில் கிம் ஜாங்-உன் செல்வார் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.