நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன
நித்யானந்தா நிறுவிய நாடான கைலாசாவின் "பிரதிநிதிகள்" கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்து கைலாசா பற்றிய பேச்சு அதிகமாகி இருக்கிறது. கைலாசா இதுவரை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளபடவில்லை. இப்படிப்பட்ட பகுதிகளை பொதுவாக மைக்ரோ-நேஷன்கள் (குறுநாடுகள்) என்று அழைக்கிறார்கள். கூகுள் மேப்ஸின் படி, உலகில் சுமார் 80 மைக்ரோ-நேஷன்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்க்கலாம். ரஜ்னீஷ்புரம் இது இந்திய ஆன்மீக குரு, ரஜ்னீஷ் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் வடமேற்கு அமெரிக்காவில், ஓரிகானின் வாஸ்கோ கவுண்டியில் ஒரு மத நோக்கமுள்ள சமூகத்தை அமைத்தார். ரஜ்னீஷ்புரத்திற்கு சொந்தமாக போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் பொது போக்குவரத்து அமைப்பு இருந்தது. இது 1981-1988க்கு இடையில் ஒரு நகரமாக மாற்றப்பட்டது.
இன்னும் இயக்கத்தில் இருக்கும் குறு நாடுகள்
லிபர்லாந்து இந்த "நாடு" 2015 இல் செக் அரசியல்வாதியும் ஆர்வலருமான விட் ஜெட்லிகாவால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. கைலாசாவைப் போலவே, லிபர்லேண்டிற்கும் சொந்தமாக இணையதளம் உள்ளது. இது குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையில் ஒரு நிலத்தில் அமைந்துள்ளது. லிபர்லாந்தில் இரண்டு துணை ஜனாதிபதிகள் மற்றும் ஐந்து அமைச்சர்களும் உள்ளனர். சீலாந்து இது 1967 இல் ஒரு இராணுவ கோட்டையில் நிறுவப்பட்டது. இது இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ராய் பேட்ஸ் தனது வானொலி நிலையத்தை அமைப்பதற்காக இதை முதலில் ஆக்கிரமித்தார். அதன்பின், அவர் கோட்டைத் தீவை "சீலாந்து" இன் சுதந்திர மாநிலமாக அறிவித்தார். அறிக்கைகளின்படி, சீலாந்தின் மக்கள் தொகை 70 ஆகும்.