இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா
கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனது பிறந்த நாடான இந்தியாவில் "இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார்" என்று கூறி இருந்தார். கடந்த வாரம் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரியா, பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா துன்புறுத்தப்படுவதாக அப்போது அவர் கூறினார். இந்த நிகழ்வில் அவர் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா" இந்தியாவை "உயர்ந்த மதிப்பில்" வைத்திருப்பதாக விஜயபிரியா தெளிவுபடுத்தினார்.
இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கைலாசா
"பகவான் நித்யானந்த பரமசிவம், அவர் பிறந்த இடத்தில் இருக்கும் சில இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கைலாசா, இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது. மேலும், இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது. நன்றி" என்று ஒரு அறிக்கையில் விஜயபிரியா கூறி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஐக்கிய நாடுகள் சபையில் நான் வெளியிட்ட அறிக்கை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டு வருகிறது. SPH மற்றும் கைலாசாவிற்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் மற்றும் வன்முறையைத் தூண்டும் இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்." என்று விஜயபிரியா கூறியுள்ளார்.