வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது. பல தசாப்தங்களுக்கு பிறகு வரலாறு காணாத மழை நியூயார்க்கில் பெய்ததை அடுத்து, அந்த நகரத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ சேவைகள் முழுவதுமாக செய்லபடவில்லை. நியூயார்க் நகரின் லாகார்டியா விமான நிலையத்திற்குள் நுழைய விமானப் பயணிகள் வெள்ளநீரில் விமானத்தை தரையிறக்க வேண்டியிருந்தது. அந்த விமான நிலையத்தின் டெர்மினல்களில் ஒன்று மூடப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 200 விமானங்கள் தாமதமாகின. வெள்ள நீர் சாலைகளையும் வாகனங்களையும் மூழ்கடித்ததால், போக்குவரத்து நெரிசல் நகரின் இயக்கத்தை முடக்கியது.
நியூயார்க் நகரத்தில் அவசரகால நிலை அறிவிப்பு
இதற்கிடையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். "நீங்கள் வீட்டில் இருந்தால், வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வேலையிலோ அல்லது பள்ளியிலோ இருந்தால், இப்போதைக்கு அங்கேயே தங்கி இருங்கள். நகரத்தில் சில சுரங்கப்பாதைகள்(மெட்ரோ) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதனால், நகரத்தை சுற்றி வருவது மிகவும் கடினம்" என்று ஆடம்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூயார்க் நகரம், லாங் ஐலேண்ட் மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்த நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், வெள்ளத்தின் நீர்மட்டம் முழங்கால்களுக்கு மேல் போகும் வரை காத்திருக்காமல், மக்கள் விரைவில் தப்பிக்கும் வழிகளை திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டார்.