
ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான தனகா தாமி மற்றும் அர்ஜுன் ஷாஹி ஆகியோர், பொதுமக்கள் எதிர்கொண்ட பரவலான ஊழல் மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையே, இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்தனர். இந்த இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல, மாறாக, அரசியல் அமைப்பைச் சீர்திருத்துவதற்காக உருவானது எனத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
கண்காணிப்பு
கண்காணிப்பு அமைப்பாக செயல்பட திட்டம்
ஷாஹி மேலும், "அரசாங்கத்தில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால், பொறுப்புணர்வை உறுதிசெய்யும் வகையில் அமைப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்து சீர்திருத்துவோம்." என்று கூறினார். இந்த அமைப்பு, அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பாக செயல்பட்டு, அரசியல்வாதிகளைப் பலனடையச் செய்த சட்டங்களை மாற்றியமைக்கக் கோரி, அரசியலமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள், உள்ளூர் வேலைவாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்தும் கவலை தெரிவித்தனர். இதற்குத் தீர்வாக, வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்று, குறிப்பாக இந்தியாவை நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரும் தலைவர் மோடி
ஷாஹி, "பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். அவர் இந்தியப் பொருளாதாரத்தை உலகின் முதல் மூன்று இடங்களுக்குக் கொண்டு வந்துள்ளார். நாங்கள் அவரது செய்தியை வரவேற்கிறோம்." என்று கூறினார். இந்த இயக்கம், வன்முறைக்கான அழைப்புகள் வந்த போதிலும் அமைதியாகவே இருந்தது என ஜென் ஜி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், "பழைய தலைவர்கள் வன்முறையைத் தூண்டினர். எங்கள் இயக்கம் இளைஞர்களின் எழுச்சி மற்றும் சமூக ஊடகங்களின் சக்தியைக் காட்டுகிறது." என்று கூறினர்.