நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா
கடந்த மாதம், 5 இந்தியர்கள் உட்பட 72 பேரை காவு வாங்கிய நேபாள விமான விபத்து ஏற்படுவதற்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியே காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 691, பழைய விமான நிலையத்திற்கும் பொக்காராவில் இருக்கும் புதிய விமான நிலையத்திற்கும் இடையே உள்ள சேதி நதி பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானது. விமானத்தை தரையிறக்க விமான காக்பிட்டில் உள்ள ஃபிளாப்ஸ் லிவரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, விமானிகளில் ஒருவர் என்ஜின்களை முடக்கும் ஒரு லிவரை பயன்படுத்தியுள்ளார் என்று ஆரம்ப விபத்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமான குழுவினர் தொடர்ந்து இயக்கிய மூன்றாவது விமானம்
இரண்டு என்ஜின்களின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதர் என்ற நிலைக்குச் சென்ற பிறகு விமானம் உந்துதலை இழந்து விழுந்திருக்கிறது. இரண்டு என்ஜின்களின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதர் என்ற நிலைக்கு செல்வது மிகவும் அரிது என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. "ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர்(ATC) தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கியபோது, என்ஜின்களில் இருந்து மின்சாரம் வரவில்லை என்று பைலட் ஃப்ளையிங்(PF) இரண்டு முறை எச்சரித்துள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விபத்தின் போது விமானத்தின் என்ஜின்கள் நன்றாக தான் செயல்பட்டு கொண்டிருந்தது என்று அறிக்கை கூறுகிறது. முதற்கட்ட அறிக்கையின்படி, அந்த விமானத்தில் இருந்த விமானக் குழுவினர் காத்மண்டு மற்றும் பொக்காரா இடையே ஒரே நாளில் இரண்டு விமானங்களை இயக்கியுள்ளனர். விபத்துக்குள்ளான விமானம், அதே ஊழியர்களால் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இயக்கப்பட்ட விமானமாகும்.