நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் நிறைவு: பாகிஸ்தானில் உருவாகிறது புதிய கூட்டணி அரசு
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், புதிய கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் ஒப்பந்தமிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி(PPP) தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, "பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) தலைவர் ஷேபாஸ் ஷெரீப்(72) மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்று அறிவித்தார். அதே நேரத்தில், பிபிபி இணைத் தலைவர் ஆசிப் சர்தாரி(68) மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
பெரும்பான்மையை பிடிக்க தவறிய இம்ரான் கான் கட்சி
"PPP மற்றும் PML-N தேவையான எண்ணிக்கையை அடைந்துவிட்டன, தற்போது நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் உள்ளோம்" என்று பிலாவல் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு வேட்பாளர்களும், சன்னி இத்தேஹாத் கவுன்சிலும்(SIC) மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டனர் என்றும் அவர் கூறினார். பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகளில் தொங்கு சபை(எந்த கட்சியும் பெரும்பானமை வாக்குகளை பெறாத நிலை) ஏற்ப்பட்டது. அதனை தொடர்ந்து, PPP மற்றும் PML-N காட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.