விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல்
ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார். பங்களாதேஷில் அரசாங்க வேலைகளுக்கான சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக பல வாரங்களாக வன்முறை நடந்து வந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இறுதியில், பங்களாதேஷ் ராணுவம் 45 நிமிடங்கள் கெடு விதித்ததை அடுத்து அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
தாயின் ராஜினாமா குறித்து மகன் சஜீப் வசேத் ஜாய் விளக்கம்
போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் வீட்டை நெருங்கியதும், ராணுவம் நெருக்கிய நிலையிலும், தனது தாயாருக்கு அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய நேரம் கிடைக்கவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய சஜீத், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, அவர் இன்னும் பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார் என்று அவர் கூறினார். மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும் என தான் நம்புவதாக கூறிய அவர், அடுத்த தேர்தலில் அம்மாவின் கட்சியான அவாமி லீக் பங்கேற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஷேக் ஹசீனா விரைவில் நாடு திரும்புவார் என்றும் அவர் அரசியல் புகலிடம் எதுவும் கோரவில்லை என்றும் கூறிய சஜீப், ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.