மரணம் வரை ஒன்றாக பயணித்த பள்ளி காதல் ஜோடி: நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட தம்பதி
நெதர்லாந்தில் உள்ள ஒரு ஜோடி, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்ந்த பிறகு, தங்கள் வாழ்க்கையையும் ஒன்றாக முடித்துக்கொள்ள முடிவு செய்தனர். நெதர்லாந்தை சேர்ந்த ஜான் ஃபேபர் (70) மற்றும் அவரது மனைவி எல்ஸ் வான் லீனிங்கன் (71), இருவருக்கும் வயதுமூப்பின் காரணமாக சில உடல்நலகோளாறுகள் ஏற்பட ஆரம்பித்ததும், இருவரும் கருணைக் கொலையைத் தேர்ந்தெடுத்தனர். முதல்முதலாக இருவரும் மழலையர் பள்ளியில் சந்தித்து கொண்டனர் எனக்கூறப்படுகிறது. அதன் பின்னர் காதல் வயப்பட்டு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திருமணம் வாழ்க்கையை மகிழ்ச்சியை கழித்த நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு, ஜான் ஃபேபருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக மாறியது.
மனசோர்வடைந்த தம்பதிகள் கருணைக்கொலையை தேர்வு செய்தனர்
இந்த நிலையில் தான் மனைவி எல்ஸுக்கும் டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மனமுடைந்த தம்பதிகள் கருணைக்கொலை பற்றி யோசித்து உள்ளனர். இந்த நிலையில் தான் நெதர்லாந்தில் கருணைக்கொலை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. உடனே இந்த தம்பதியினர் இரட்டை கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தனர். இவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஜூன் 3 அன்று அவர்களுக்கு அதற்கான மருந்து வழங்கப்பட்டது. இது பற்றி மரணத்திற்கு முன்னர் BBC நிறுவனத்திடம் பேசிய ஜான்,"நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், எனக்கு இனி வலி தேவையில்லை. வேறு தீர்வும் இல்லை" எனக்கூறினார். ஜான் மற்றும் எல்ஸிக்கு ஒரு மகன் என பிபிசி செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட கருணைக்கொலை
கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் கோரிக்கை மற்றும் உதவி தற்கொலை (மறுபரிசீலனை நடைமுறைகள்) சட்டத்தின் கீழ் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இது 2002 இல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கருணைக்கொலை நடைமுறையை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக நெதர்லாந்து ஆனது. இந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளம், கருணைக்கொலை கோரிக்கைகள் "முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் தாங்க முடியாத துன்பத்தை அனுபவிக்கும் நோயாளிகளால்" செய்யப்படுகின்றன என்று கூறுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 93 வயதான முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் மற்றும் அவரது மனைவி யூஜெனி வான் அக்ட் ஆகியோரும் இந்த கருணைக்கொலையை தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.