மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை எழுதி அதை நாசம் செய்துள்ளனர். ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் ஹாமில்டன் நகரில் உள்ள சிட்டி ஹால் அருகே வியாழன் அதிகாலை இந்த நாசவேலை நடந்தது. அந்த குறிப்பிட்ட மகாத்மா காந்தியின் சிலை 2012 அந்த இடத்தில் நிறுவப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் பரிசளிக்கப்பட்ட அந்த ஆறடி உயரமுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலையில், மகாத்மா காந்திக்கு எதிரான வாசங்கங்களும் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. மேலும், அந்த காந்தி சிலையின் கைகளில் காலிஸ்தான் கொடியும் வைக்கப்பட்டுள்ளது.
சிலையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது: போலீஸ்
இதை வியாழக்கிழமை அதிகாலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சிலையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு புகார் கிடைத்ததாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் ஹாமில்டன் போலீசார் தெரிவித்துள்னர். பிப்ரவரியில், கிரேட்டர் டொராண்டோ ஏரியாவில் (ஜிடிஏ) உள்ள ஒரு இந்து கோவில் இதே போல் சேதப்படுத்தப்பட்டது. அந்த கோவிலிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் காலிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. ஜனவரி 30 அன்று, பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர் இதேபோல் சேதப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, ரிச்மண்ட் மலையில் இருக்கும் விஷ்ணு மந்திரில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலிஸ்தான் ஆதரவாளராகளால் சிதைக்கப்பட்டது.