நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் பெரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் நடந்த எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை போராட்டங்களால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறிய நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டு கொன்றதை அடுத்து, இந்த போராட்டங்கள் வெடித்தன. நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட்டும், பாரிஸில் உள்ள அக்கோர் அரங்கில் பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜானின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
"முற்றிலும் பொறுப்பற்றவர்": ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தியரி மரியானி
அந்த நிகழ்ச்சிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "சட்டர்டே நைட்ஸ் ஆல்ரைட் ஃபார் ஃபைட்டிங்" மற்றும் "பர்ன் டவுன் தி மிஷன்" போன்ற பாடல்களுக்கு தனது கால்களை தட்டி, அதை ரசித்து கேட்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும், பிரபல பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜான், அதிபர் மக்ரோனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான தியரி மரியானி, அதிபர் மக்ரோனை "முற்றிலும் பொறுப்பற்றவர்" என்று விமர்சித்துள்ளார். மேலும், பிரான்ஸ் அதிபரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.