பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் சென்று கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர். அந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நாடு முழுவதும் போலீஸ் அராஜகத்திற்கு எதிராகவும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. நஹெலை கொலை செய்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போராட்டத்தின் போது, 492 பொது கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டன. 2,000 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
போராட்டங்களைச் சமாளிக்க 45,000 அதிகாரிகள் நியமனம்
இந்த 4 நாட்களில் நாடு முழுவதும் 3,880 தீ விபத்துகள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காவல்துறை மற்றும் துணை ராணுவ ஜெண்டர்ம் படையை சேர்ந்த 45,000 அதிகாரிகள் வன்முறைப் போராட்டங்களைச் சமாளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட 471 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறியுள்ளார். பாரிஸ் பிராந்தியத்தின் பேருந்து மற்றும் டிராம் பாதைகள் நேற்று கடுமையாக சேதப்படுத்தப்பட்டன என்று RATP போக்குவரத்து ஆபரேட்டர் தெரிவித்துள்ளார். பாரிஸ் பிராந்தியத்தில் குறைந்தது மூன்று நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.