LOADING...
டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்கிய விவகாரம்; அப்படி பதக்கத்தை மாற்றலாமா? நோபல் கமிட்டி பதில்
தனக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை அதிபர் ட்ரம்ப்பிடம் மச்சாடோ பரிசாக வழங்கியுள்ளார்

டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்கிய விவகாரம்; அப்படி பதக்கத்தை மாற்றலாமா? நோபல் கமிட்டி பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
09:19 am

செய்தி முன்னோட்டம்

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் நோபல் அமைதி வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தனக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை அதிபர் ட்ரம்ப்பிடம் மச்சாடோ பரிசாக வழங்கியுள்ளார். வெனிசுலாவின் அரசியல் மாற்றத்திற்கும், ஜனநாயக மீட்பிற்கும் அதிபர் ட்ரம்ப் ஆற்றி வரும் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தச் செயலை செய்ததாக மச்சாடோ தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்துப் பதிவிட்ட அதிபர் டிரம்ப், மச்சாடோ ஒரு "அற்புதமான பெண்மணி" என்று பாராட்டியதோடு, அவர் வழங்கிய கௌரவம் தனக்குக் கிடைத்த பெருமை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்தப் பதக்கம் அதிபரின் வசமே உள்ளது.

நோபல் கமிட்டி

வழங்கப்பட்ட பரிசை இன்னொருவருக்கு தர முடியுமா?

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக நோபல் அமைதி மையம் (Nobel Peace Center) முக்கியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. நோபல் குழுவின் விதிமுறைகளின்படி, ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்குப் பகிரவோ அல்லது மாற்றவோ முடியாது என்று அக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அக்குழு, "பதக்கம் உரிமையாளர்களை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் நோபல் பரிசு வெற்றியாளர் என்ற பட்டம் மாறாது. நோபல் குழுவின் முடிவு இறுதியானது மற்றும் அது காலத்திற்கும் மாறாதது" என்று தெளிவுபடுத்தியுள்ளது. வெனிசுலா முன்னாள் அதிபர் மதுரோவின் பதவி நீக்கத்திற்கு அமெரிக்கா அளித்த ஆதரவை தொடர்ந்து இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மச்சாடோவின் இந்தச் செயல் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் நோபல் பரிசின் மரபுகள் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement