1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனட நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரா என்று சில அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1985ஆம் ஆண்டு அயர்லாந்தில் வைத்து ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 329 பயணிகள் உயிரிழந்தனர். கொடூரமான இந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டவர் தல்விந்தர் சிங் பர்மர் என்ற பயங்கரவாதி ஆவார்.
தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?
அந்த சமயத்தில், தல்விந்தர் சிங் பர்மருக்கு கனடா தான் அடைக்கலம் கொடுத்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ அப்போது கனடாவின் பிரதமராக இருந்தார். அப்போது, தல்விந்தர் சிங் பர்மரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும், கனேடிய அரசாங்கம் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. பர்மர், காலிஸ்தான் பிரிவினையை தூண்டும் சீக்கிய போராளிக் குழுவான பாபர் கல்சா இன்டர்நேஷனலின்(BKI) நிறுவனர், தலைவர் மற்றும் ஜதேதார் ஆவார். "1982ஆம் ஆண்டு, கொலை குற்றங்களுக்காக தல்விந்தர் பர்மரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய கோரிக்கையை பியர் ட்ரூடோவின் அரசாங்கம் நிராகரித்தது." என்று பிரபல கனேடிய பத்திரிகையாளர் டெர்ரி மிலேவ்ஸ்கி தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார்.
ராணிக்கு மரியாதை செலுத்தாததால் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட கனடா
"இந்தியா, ராணிக்கு போதுமான மரியாதை காட்டவில்லை என்ற காரணதிற்காக இது செய்யப்பட்டது. இந்தியா, காமன்வெல்த் தலைவராக மட்டுமே ராணியை அங்கீகரித்தது. நாட்டின் தலைவராக அங்கீகரிக்கவில்லை." என்றும் அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இந்தியாவும் கனடாவும், காமன்வெல்த் குழுவின் உறுப்பினர்களாகும். எனவே, காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான ஒப்படைப்பு நெறிமுறைகளின் படி, இது போன்ற சூழ்நிலைகளில், ஒரு காமன்வெல்த் நாடு இன்னொரு காமன்வெல்த் நாட்டிடம் ஒரு குற்றவாளியை ஒப்படைக்க கோரிக்கை விடுத்தால் அந்த கோரிக்கையை கண்டிப்பாக அந்த நாடு ஏற்க வேண்டும். ஆனால், அப்போதைய ராணியை இந்தியா அங்கீகரிக்கவில்லை எனபதால் கனடா, அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
கனேடியர்களுக்கு நடந்த மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த பர்மர்
1981 ஆம் ஆண்டில், 2 பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாக பர்மர் குற்றம் சாட்டப்பட்டு 1983 இல் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். அதன் பின், அவர் 1984இல் விடுவிக்கப்பட்டார். அதற்கு பிறகு, 1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டதாக அவருக்கு பெயரிடப்பட்டது. கனடாவில் உள்ள காலிஸ்தானிகள் அவரைப் புகழ்ந்து பேசினர். 1985 விமான குண்டுவெடிப்பு, கனடாவின் மிக மோசமான படுகொலை வழக்காகவும் கனடாவின் வரலாற்றில் மோசமான பயங்கரவாத தாக்குதலாகவும் கருதப்படுகிறது. இறுதியில், பர்மர் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து பஞ்சாப்பில் பதுங்கியிருந்தார். அப்போது பஞ்சாப் காவல்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எந்தெந்த வருடத்தில் என்னென்ன நடந்தது?
1981- இரண்டு பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாக பர்மர் குற்றம் சாட்டப்பட்டார். 1982- பர்மரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய கோரிக்கையை பியர் ட்ரூடோவின் அரசாங்கம் நிராகரித்தது. 1983 - பர்மர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். 1984 - பர்மர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1985- ஜூன் 23, 1985 அன்று, இங்கிலாந்தின் டொராண்டோவிலிருந்து லண்டன் செல்லும் வழியில் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வெடித்தது. அதில் இருந்த 329 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் கனேடியர்கள் ஆவர். இன்றுவரை, ஏர் இந்தியா குண்டுவெடிப்பு தான் கனடாவின் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக உள்ளது. 1992- 15 அக்டோபர் 1992அன்று, பர்மர் பஞ்சாப் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.