இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்
ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார். மாலத்தீவு நாட்டில் ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாலத்தீவில் உள்ள வெளிநாட்டு துருப்புக்களின் எண்ணிக்கையை அதிபர் முய்சுவின் அரசாங்கம் வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது என்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார். "100 நாட்களில், இது தெளிவாக தெரிந்துவிட்டது. 'ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள்' என்ற அதிபர் முய்சுவின் கூற்றுக்கள் அவர் கூறும் மற்றொரு பொய். தற்போதைய நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையை வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது" என்று ஷாஹித் கூறியுள்ளார்.
"வெளிநாட்டு இராணுவம் மாலத்தீவில் இல்லாத நிலை வேண்டும்": மாலத்தீவு
"நாட்டில் ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. வெளிப்படைத்தன்மை முக்கியம், உண்மை வெல்ல வேண்டும்" என்றும் ஷாஹித் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ வீரர்களின் முதல் குழு மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னர் மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், இரண்டு விமான தளங்களை நிர்வகிக்கும் மீதமுள்ள இந்திய துருப்புக்கள் மே 10 க்குள் திருப்பி அனுப்பப்படும் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி அதிபர் முய்சு கூறியுள்ளார். வெளிநாட்டு இராணுவம் மாலத்தீவில் இல்லாத நிலைக்கு நாட்டை இட்டுச் செல்வதே இலக்கு என மாலத்தீவு அதிபர் கூறியிருந்தார். மாலத்தீவு அதிபரின் அந்த கூற்றை முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தற்போது கடுமையாக சாடியுள்ளார்.