சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது
சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் ஒரு முக்கிய சட்டம் அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் நடைமுறைக்கு வந்தது. சாதிய பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்த முதல் அமெரிக்க நகரம் என்ற பெயரை சியாட்டல் பெற்றுள்ளது. கடந்த மாதம், இந்திய-அமெரிக்க அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணரான க்ஷாமா சாவந்த் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். சாதிப் பாகுபாட்டைத் தடை செய்த முதல் அமெரிக்க நகரமாக மட்டுமல்லாமல், தெற்காசியாவிற்கு அடுத்தபடியாக இதை சட்டமாக்கிய ஒரே நகரம் சியாட்டல் மட்டுமே. "தெற்காசியாவிற்கு அடுத்தபடியாக, சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான உலகின் முதல் தடை இன்று நமது சியாட்டில் நகரில் அமலுக்கு வருகிறது!" என்று சாவந்த் திங்கள்கிழமை(மார் 27) தெரிவித்தார்.
சாதிய பாகுபாட்டிற்கு எதிராக முன்மொழியப்பட்ட கொள்கைகள்
"சியாட்டலின் சட்டம், பணியிடங்களில் பணியமர்த்தல், பதவிக்காலம், பதவி உயர்வு, பணியிட நிலைமைகள் மற்றும் ஊதியம் ஆகியவற்றில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டபடுவதைத் தடைசெய்கிறது" என்று சாவந்த் கூறினார். ஹோட்டல்கள், பொதுப் போக்குவரத்து, பொதுக் கழிவறைகள் அல்லது சில்லறை வணிக நிறுவனங்கள் போன்ற பொது இடங்களில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதையும் இது தடை செய்கிறது. வாடகை வீட்டுக் குத்தகை, சொத்து விற்பனை மற்றும் அடமானக் கடன் ஆகியவற்றில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டபடுவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது. சியாட்டலில் சாதிய பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டதை அடுத்து, டொராண்டோ மற்றும் கலிபோர்னியாவிலும் சாதிய பாகுபாட்டிற்கு எதிரான கொள்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.