சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம்
சியாட்டல், சாதிய பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்த முதல் அமெரிக்க நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது. நகர சபையின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எழுதிய சபை உறுப்பினர் க்ஷமா சாவந்த், சாதிய பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் "அனைத்து வகையான அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டத்துடன் தொடர்புடையது" என்று கூறி இருக்கிறார். அமெரிக்காவில் சாதிய பாகுபாடு அதிகமாகிவிடாமல் தடுக்க இது அவசியமானது என்று இந்த தடையை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள சாதிய அமைப்பு 3,000 ஆண்டுகள் பழமையானதாகும். இது இந்து மதத்தவர்களை பல்வேறு படிநிலை சாதிகளாக பிடிக்கிறது. இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த சாதிய அமைப்பு தற்போது அமெரிக்கா வரை சென்று அங்கிருக்கும் அமெரிக்க-இந்தியர்களையும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கி இருக்கிறது
தெற்காசிய அமெரிக்கர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் சாதிய பாகுபாடு இருக்கிறது: சாவந்த்
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் சமீப ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்காக இந்த சட்டத்தை சியாட்டல் இயற்றியுள்ளது. "சாதிய பாகுபாடு மற்ற நாடுகளில் மட்டும் காணப்படுவதில்லை. தெற்காசிய அமெரிக்கர்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்த மக்கள் இருக்கும் அனைத்து பணியிடங்களிலும் இது இருக்கிறது" என்று சியாட்டல் நகர சபையில் உள்ள ஒரே இந்திய அமெரிக்கரான சாவந்த் கூறியுள்ளார். 1948 முதல் இந்தியாவில் சாதிய பாகுபாடு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பாக தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களை முதலில் "தீண்டத்தகாதவர்கள்" என்று அழைத்த சமூகம், தற்போது அவர்கள் குடிக்கும் நீரில் மனித கழிவுகளை அள்ளி போடும் நிலையில் வந்து நிற்கிறது.