மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!
செய்தி முன்னோட்டம்
மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50கிமீ தொலைவில் உள்ள பதங்கலி என்ற மலைப்பகுதியில் 90 பேருக்கு மேல் நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த பதங்கலி மலைப்பகுதி, மலையேற்றத்திற்கு மிகவும் பிரபலமானது. இந்த பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
மலை மேல் இருந்த ஒரு பகுதி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்தது.
இங்கிருந்து சுமார் 100 அடிக்கு கீழ் மலையேறுபவர்கள்(Hikers) மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஒரு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
மலைசரிவால் சரிந்த பாறைகளும் மண்ணும் இந்த முகாமை மொத்தமாக மூடிவிட்டது.
இந்த விபத்து நடக்கும் போது முகாமிற்குள் குழந்தைகளையும் சேர்த்து சுமார் 90 பேர் இருந்துள்ளனர்.
மீட்பு
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மேலாண்மை படை!
இந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(டிச.16) மதியம் வரை, 60 பேரை இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்டுள்ளனர். இன்னும் 17 பேர் எங்கு சிக்கியுள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை.
இந்த சரிவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 16.
மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தன் ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நிலச்சரிவு வரும் அளவுக்கு கனமழையோ நிலநடுக்கமோ ஏற்படவில்லை என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், அடுத்த 7 நாட்களுக்கு யாரும் ஆற்றோரங்கள், கரையோரங்கள் போன்ற அபாயகரமான இடங்களில் முகாமிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.