டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புடினிடம் பேசவே இல்லையாம்; ரஷ்யா விளாசல்
டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையே சமீபத்தில் நடந்த தொலைபேசி அழைப்பைக் கூறும் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் திங்களன்று (நவம்பர் 11) மறுத்துள்ளது. அந்த அழைப்பில் டிரம்ப் உக்ரைன் போரை அதிகரிக்க வேண்டாம் என்று புடினிடம் வலியுறுத்தியதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது. தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கைகளில், மோதலை தீவிரப்படுத்துவதற்கு எதிராக டிரம்ப் புடினுக்கு அறிவுரை கூறியதாகவும், ஐரோப்பாவில் அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ள ராணுவத்தின் அளவை மேற்கோள்கட்டி இதை தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்த அறிக்கைகளை முழுமையான கற்பனை என்று குறிப்பிட்டதோடு, அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.
ஊடகங்கள் மீது விமர்சனம்
பெஸ்கோவ் தற்போதைய ஊடக அறிக்கையின் தரத்தை விமர்சித்தார். தரம்வாய்ந்த ஊடகங்களில் இருந்தும் இத்தகைய வதந்திகள் வந்துள்ளதாக அவர் விளாசினார். இதற்கிடையே, டொனால்ட் டிரம்புடன் தொடர்புகொள்வதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் தங்கள் அதிபர் விளாடிமிர் புடினுக்கு இல்லை என்று அவர் வலியுறுத்தினார். முன்னதாக, டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, உக்ரைன் நெருக்கடியை விரைவாகத் தீர்ப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட உத்திகளை வழங்கவில்லை. இதற்கிடையில், டிரம்ப் சமீபத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் உரையாடலின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை. ரஷ்யாவின் கோரிக்கைகள் மாறாமல் இருந்தாலும், டிரம்புடன் உக்ரைனைப் பற்றி விவாதிக்க புடினின் விருப்பத்தை கிரெம்ளின் முன்பு சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.