பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா
தங்களது ஒரு சோதனை ஏவுகணை சுட்டு வீழ்த்தபட்டாலும் அது போர் பிரகடனமாக கருதப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சிகள் தான் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு காரணம் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் சோதனை ஏவுகணைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தால் அது போர் அறிவிப்பாக கருதப்படும் என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறியுள்ளார். வடகொரியா இன்னும் ஏவுகணைகளை பசிபிக் பெருங்கடலில் வீசக்கூடும் என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிலைமையை மோசமாக்குகிறது: வட கொரியா
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்டதால் வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் சுட்டு வீழ்த்தியதில்லை. ஆனால் ஜப்பானின் வான்வெளியில் அதிக ஏவுகணைகளை வீசப்போவதாக வட கொரியா கூறியதால் இந்த முடிவு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. "பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஆதிக்கத்திற்கு சொந்தமானது அல்ல" என்று கிம் கூறியுள்ளார். "B-52 குண்டுவீச்சுடன் கூட்டு விமானப் பயிற்சியை நடத்தி, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் களப் பயிற்சிகளைத் திட்டமிடுவதன் மூலம் அமெரிக்கா நிலைமையை "மோசமாக்குகிறது" என்று வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.