ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள்
வட கொரியாவில் பஞ்சம் நிலவி வரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் ரூ.2 லட்சம்(£1,950) மதிப்பிலான கிறிஸ்டியன் டியோர் வெல்வெட் ஹூடியை அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மார்ச் 16 அன்று ஏவுகணை ஏவுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்தார். இந்த செய்தி வட கொரிய மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்யோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில், ஹ்வாசாங்-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுவதைப் பார்க்க வந்திருந்த கிம் ஜூ ஏயின் ஜாக்கெட், பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வட கொரியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட விலை உயர்ந்த ஜாக்கெட்
ஆனால், தென் கொரிய செய்தி நிறுவனமான 'தி சோசன் இல்போ' வட கொரிய சர்வாதிகாரியின் மகள் அணிந்திருந்த ஜாக்கெட் உண்மையானதா அல்லது போலியானதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஒருவேளை அது உண்மையான 'டியோர்' ஆக இருந்தால், அந்த ஜாக்கெட்டின் விலை வட கொரியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட அதிகமானதாகும். வட கொரியாவின் சராசரி தனிநபர் வருமானம் £1,300 என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஜாக்கெட்டின் விலை சுமார் 2,800 டாலர்களாகும். உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான வட கொரியாவில் தற்போது நிலவி வரும் பஞ்சத்துக்கு மத்தியில், கிம்மின் மகள் ஏகபோகமாக உடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.