ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று திரும்பிய சில நாட்களில் இது நடந்திருக்கிறது. அவர் அங்கு சென்றிந்த போது, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தை குறிவைக்கும் "தீவிர நடவடிக்கைகளுக்கு" எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். தி ஆஸ்திரேலியா டுடே போர்ட்டலின் படி, பிரிஸ்பேனின் டாரிங்கா புறநகரில் இருக்கும் ஸ்வான் சாலையில் அமைந்துள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகம் பிப்ரவரி 21ஆம் அன்று இரவு காலிஸ்தான் ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டிருக்கிறது.
தொடர் கண்காணிப்பில் இந்திய தூதரகம்
பிரிஸ்பேனில் இருக்கும் இந்தியாவின் கெளரவ தூதர் அர்ச்சனா சிங் பிப்ரவரி 22 அன்று அலுவலகத்திற்கு சென்றபோது காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். சிங் உடனடியாக குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்தினார். அங்கு வந்ததும் கொடியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், தூதரகத்தில் வேறு ஏதும் அச்சுறுத்தல்கள் இருக்கிறதா என்பதையும் சரி பார்த்தனர். "எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க போலீசார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். போலீஸின் மீது எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது," என்று அர்ச்சனா சிங், தி ஆஸ்திரேலியா டுடேவிடம் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் மூன்று இந்துக் கோவில்களை நாசப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.