மும்பை எர்த்ஷாட் விழாவில் இந்திய ஆடையில் ஜொலித்த இளவரசி கேட் மிடில்டன்: ஆடை வடிவமைப்பாளர் பகிர்ந்த சுவாரசிய பின்னணி
செய்தி முன்னோட்டம்
மும்பையில் அண்மையில் நடைபெற்ற Earthshot Prize விழாவில், பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் அணிந்திருந்த சிவப்பு நிற 'நீலம் அனார்கலி' கவுன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்திய ஆடை வடிவமைப்பாளர் மஹிமா மகாஜன் வடிவமைத்த இந்த ஆடை, இளவரசி கேட் மிடில்டனை சென்றடைந்த சுவாரசிய பின்னணியை மஹிமா மகாஜன் 'Variety India' இதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
விவரங்கள்
கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்ட இளவரசியின் தேர்வு
இந்தப் பயணம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு லண்டனில் உள்ள லில்லிஸ் பொட்டிக் என்ற விற்பனையகத்திலிருந்து வந்த அழைப்பின் மூலம் தொடங்கியுள்ளது.
மஹிமா மகாஜனின் ஆடைகளை விற்பனை செய்யும் லண்டன் பொட்டிக்கை தொடர்பு கொண்ட அரண்மனை அதிகாரிகள், இந்த சிவப்பு நிற அனார்கலி ஆடை இருக்கிறதா எனக்கேட்டுள்ளனர்.
"கேட் மிடில்டனுக்கு அந்த ஆடை மிகவும் பிடித்துவிட்டது. அதை அணிந்து பார்த்தபோது அவருக்கு இன்னும் அதிகமாக பிடித்திருந்தது. ஆனால் கடையில் இருந்த ஆடையின் அளவு அவருக்கு பெரியதாக இருந்ததால், அரண்மனை தரப்பிலிருந்து எங்களை தொடர்பு கொண்டனர்"என மஹிமா கூறியுள்ளார்.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் எர்த்ஷாட் விழாவிற்காக இந்தியா வருகிறார்கள் என்பதோ, இந்த ஆடை இறுதி செய்யப்பட்டதா என்பதோ ஆரம்பத்தில் மஹிமாவுக்குத் தெரியாது.
மாற்றங்கள்
தேவதை போன்ற தோற்றம் & சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றங்கள்
மஹிமா மகாஜனின் 'மெஹ்பில்' தொகுப்பில் இடம்பெற்றிருந்த இந்த நீலம் அனார்கலி ஆடையில், கேட் மிடில்டனின் விருப்பத்திற்கு ஏற்ப சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
"கேட் மிடில்டன் ஒரு தேவதை போன்ற தோற்றத்தை விரும்பினார். அதற்காக அவர் நடக்கும்போது தெரியும் வகையில் ஆடையின் பின்பகுதியில் சுமார் 3 இன்ச் நீளத்திற்குத் தரை தொடும் வடிவமைப்பை உருவாக்கினோம்."
எர்த்ஷாட் பரிசின் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு ஏற்ப, ஆடையில் இருந்த மரகத மணிகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்ணாடி மணிகள் பொருத்தப்பட்டன.
மேலும், தனது வடிவமைப்பில் உருவான இந்த உடையுடன், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த பாரம்பரிய அரச குடும்பத்து நகைகளை கேட் மிடில்டன் அணிந்திருந்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என மஹிமா மகாஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.