
உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமளிக்கும் இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் குழு சென்று கொண்டிருந்தது.
ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய தலைநகர் விமான நிலையத்தில் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் தரையிறங்க அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, தூதுக்குழுவின் விமானம் நடுவானில் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தரையிறக்கம்
பாதுகாப்பாக தரையிறக்கம்
விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் அனைத்துக் கட்சிக் குழுவையும் வரவேற்று பாதுகாப்பை ஒருங்கிணைத்து, வந்தவுடன் உறுப்பினர்களை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.
உயர்மட்டக் குழுவில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் தூதர்கள் உள்ளனர்.
கனிமொழியுடன், ராஜீவ் ராய் (சமாஜ்வாதி கட்சி), மியான் அல்தாஃப் அகமது (தேசிய மாநாடு), பிரிஜேஷ் சவுதா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ஆர்ஜேடி), அசோக் குமார் மிட்டல் (ஏஏபி), மற்றும் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகளான மஞ்சீவ் எஸ் பூரி மற்றும் ஜாவேத் அஷ்ரஃப் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பயணம்
கனிமொழி தலைமையிலான குழு பயணிக்கும் நாடுகள்
கனிமொழி தலைமையிலான இந்தக் குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் ஒருங்கிணைந்த தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கங்கள் மற்றும் அதற்கான நியாமான காரணங்களை எடுத்துரைக்க உள்ளது.
இடையூறு இருந்தபோதிலும், இந்திய தூதுக்குழுவின் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.