அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார். இஷிபா தனது கட்சியின் கீழ்சபை பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளவும், ஊழலால் பாதிக்கப்பட்ட கட்சியில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயற்சிப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, கடந்த வாரம் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான போட்டியில் இஷிபா வெற்றி பெற்ற நிலையில், செவ்வாயன்று நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போது ஜப்பானின் அடுத்த பிரதமராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். அவருக்கு முன்னர் பதவியில் இருந்த ஃபியூமியோ கிஷிடா தனது அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் ராஜினாமா செய்ததை அடுத்து ஷிகெரு இஷிபா கட்சியால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
ஷிகெரு இஷிபா தேர்தலை நடத்த விரும்புவதன் பின்னணி
ஜப்பான் பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், ஃபியூமியோ கிஷிடாவை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு வரும் தனக்கு உள்ள பிரபலத்தை பயன்படுத்தி முன்கூட்டியே தேர்தலை நடத்தி வெல்ல ஷிகெரு இஷிபா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஷிகெரு இஷிபா அக்டோபர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தேர்தலுக்கு முன் குறைந்தபட்சம் 12 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, மேலவை கலைக்க முடியாததால் அதன் பதவிக்காலம் ஜூலை 2025 வரை தொடரும். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கிட்டத்தட்ட முழுவதும் ஆட்சி செய்துள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சி, தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.