குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக்
கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸ், மார்ச் 17ஆம் தேதி அன்று 60% குறைவான விலைக்கு UBSஸிற்கு விற்கப்பட்டது. இது குறித்து பதிவிட்ட கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக், இது வங்கியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ளார். "கிரெடிட் சூயிஸ் 3 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. பங்கு மதிப்பில் 60 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ~600 பில்லியன் டாலர் இருப்புநிலை $3 பில்லியன் ஈக்விட்டி மதிப்புக்கு விற்கப்பட்டிருக்கிறது. $17 பில்லியன் AT1 பத்திரங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது வங்கியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும்" என்று உதய் கோடக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
30 முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றான கிரெடிட் சூயிஸ்
உலக அளவில் வங்கிகளில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியின் காரணமாக, மேலும் பங்குசந்தையில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், வங்கி நிறுவனமான UBS, பிரச்சனைக்குரிய அதன் போட்டியாளரான கிரெடிட் சூயிஸை $3.25 பில்லியனுக்கு வாங்கியுள்ளது. கிரெடிட் சூயிஸின் 50 பில்லியன் பிராங்குகள்(54 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை கடன் வாங்கும் திட்டம் முதலீட்டாளர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கத் தவறியதை அடுத்து, கிரெடிட் சூயிஸை UBS வாங்க வேண்டும் என்று சுவிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். கிரெடிட் சூயிஸ், உலகளவில் முக்கியமான வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். ஏற்கனவே அமெரிக்க வங்கிகள் பெரும் சரிவுகளை சந்தித்திருக்கும் நிலையில், கிரெடிட் சூயிஸ் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டிருப்பது பெரும் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.