சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி
அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலை தொடர்ந்து சுவிஸ் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸின் பங்குகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இந்த வங்கியும் திவாலாகி விடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த கிரெடிட் சூயிஸ் சேர்மன் ஆக்செல் லெஹ்மன், சிலிக்கான் வங்கியின் பாதிப்புகள் பிற நிறுவனங்களை பாதிக்காத அளவுதான் இருக்கும் என்று கூறியுள்ளார். சிலிக்கான் மற்றும் சில்வர்கேட் வங்கிகள் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள பெரிய வங்கிகளை நிர்வகிக்கும் அளவு கடுமையான அமலாக்கங்களுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் லெஹ்மன் கூறி இருக்கிறார். ஆனால், இந்த வங்கிகளின் வீழ்ச்சியானது ஒட்டுமொத்த சந்தைக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
28% வீழ்ச்சியடைந்த கிரெடிட் சூயிஸின் பங்குகள்
இன்று(மார் 15) கிரெடிட் சூயிஸின் பங்குகள் 28% வீழ்ச்சியடைந்துள்ளது. கிரெடிட் சூயிஸின் மிகப்பெரிய முதலீட்டாளரான சவுதி நேஷனல் வங்கி(SNB), இந்த சுவிஸ் வங்கிக்கு மேலும் நிதி உதவி வழங்க முடியாது என்று கூறியதை அடுத்து இந்த பெரும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. கிரெடிட் சூயிஸின் மாற்றத் திட்டத்தில் SNB மகிழ்ச்சியடைவதாகவும், வங்கிக்கு கூடுதல் பணம் தேவைப்படாது என்றும் சவுதி நேஷனல் வங்கியின் தலைவர் அம்மார் அல் குதைரி கூறியுள்ளார். கிரெடிட் சூயிஸ் வங்கிக்கு அரசாங்க உதவி தேவைப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிரெடிட் சூயிஸ் தலைவர், "எங்களிடம் வலுவான மூலதன விகிதங்கள் மற்றும் மிகவும் வலுவான இருப்புநிலை உள்ளது. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம்" என்று அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.