LOADING...
காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?
சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்

காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2025
09:15 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், 'சக்திவாய்ந்த' முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், பதற்றம் அதிகரித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காசாவின் தெற்குப் பகுதியான ரஃபா நகரில் இருந்த இஸ்ரேலியப் படைகள் மீது ஹமாஸ் அமைப்பு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அத்துடன், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் ஹமாஸ் தாமதம் செய்ததையும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் "அப்பட்டமான மீறல்" என்றும் பிரதமர் நெதன்யாகு கடுமையாக கண்டித்தார்.

தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலில் 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது 

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானங்கள் காசாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. வட காசாவின் முக்கிய மருத்துவமனையான ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலும், தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் குறைந்தபட்சம் 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இஸ்ரேலிய படைகளை தாக்கியதற்காக ஹமாஸ் மிக பெரிய விலையை கொடுக்க நேரிடும்; இஸ்ரேல் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் விளைவாக, பிணைக் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான அடுத்த கட்டப் போர் நிறுத்த ஒப்பந்த அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.