அபுதாபிக்கு திடீர் ரகசிய பயணம் மேற்கொண்ட நெதன்யாகு; ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ரகசிய பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை அபுதாபிக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடைபெற்ற இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்து நெதன்யாகுவின் அலுவலகமோ அல்லது ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எச்சரிக்கை
அக்டோபர் 7 தாக்குதல் எச்சரிக்கை சர்ச்சை
2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்பே, அதுகுறித்த முக்கிய எச்சரிக்கையை ஷேக் முகமது நெதன்யாகுவிடம் தெரிவித்திருந்ததாக Haaretz என்ற இஸ்ரேலிய நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த எச்சரிக்கை இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்கோ அல்லது ராணுவத்திற்கோ நெதன்யாகுவால் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் செய்தியை முற்றிலும் மறுத்துள்ள நெதன்யாகு, நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
வரவிருக்கும் கடினமான தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் இச்சம்பவத்தைக் சுட்டிக்காட்டி நெதன்யாகு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன
பின்னணி
இரு தரப்பு உறவு மற்றும் பின்னணி
இக்குற்றச்சாட்டு குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்காத ஐக்கிய அரபு அமீரகம், 2020-ஆம் ஆண்டு கையெழுத்தான ஆபிரகாம் உடன்படிக்கை மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்புகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் தலைவர்கள் மட்டத்தில் அல்லாமல், உரிய துறை சார்ந்த அமைப்புகள் மூலமே விவாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகக் கடந்த மார்ச் 26 அன்று அல்-அய்ன் நகரில் இரு தலைவர்களும் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த திடீர் ரகசிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.