Page Loader
ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி 

ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jul 21, 2024
09:38 am

செய்தி முன்னோட்டம்

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இஸ்ரேல் தலைநகர் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலுக்கு இதன் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏமன் துறைமுகத்தின் மீது இஸ்ரேல் நடத்தி இருக்கும் தாக்குதல் பெரும் தீ விபத்தையும் புகை மூட்டத்தையும் ஏற்படுத்தியது. அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாடான ஏமன், இஸ்ரேலுக்கு சுமார் 2,000 கிலோமீட்டர்கள்(1,300 மைல்கள்) தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் 

F-15 ஜெட் விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு 

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் 87 பேர் காயமடைந்தனர் என்றும் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடுமையான தீக்காயங்கள் இருந்தது. இதற்கிடையில், "எங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மிகவும் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். F-15 ஜெட் விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார். காசா போரில் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஏமனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஹொடைடாவில் உள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஹூதி அதிகாரி முகமது அப்துல்சலாம் கூறியுள்ளார்.