லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. "லெபனான் பிரதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் இராணுவ இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது" என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் குழுவும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் கூட்டாளிகளாகும். எனவே, இஸ்ரேல் ஹெஸ்புல்லா மீது தற்போது தாக்குதல் நடத்தி இருப்பதால், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மேலும் விரிவடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் போரில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள்
நேற்றைய இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை இஸ்ரேல் அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்கினர். இதற்கிடையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து பதிவிட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன், "இஸ்ரேல்-அமெரிக்காவின் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்களின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்க்காகவும்" அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்வார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.