ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு
தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட நடவடிக்கைக்கு எகிப்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ரஃபாவில் தரைவழி தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் இது எப்போது நடக்கும் என்பதை குறிப்பிடவில்லை. இதற்கிடையில், ரஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை தங்கவைக்க 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய தரைப்படைகள் இன்னும் நுழையாத நகரம்
ஒவ்வொரு கூடாரத்திலும் 10 முதல் 12 பேர் வரை தங்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக அங்குள்ள பொது மக்கள் வெளியேற்றப்படுவர் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. தெற்கு காசா நகரமான ரஃபாவில் தான் தற்போது அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நகரத்திற்குள் தான் இஸ்ரேலிய தரைப்படைகள் இன்னும் நுழையவில்லை. ஏற்கனவே இந்த நகரத்தின் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஃபாவில் நடத்தப்படும் தாக்குதல்கள், மனிதாபிமான நிலைமை மற்றும் பிராந்திய அமைதியில் "பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தும் என்று எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா அல்-சிசி கூறியுள்ளார்.