
காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு: டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் டிரம்ப். "இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக் கொள்ளப்பட்ட கோட்டிற்கு திரும்பப் பெறும்" என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் எழுதினார். "அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்!" என்றும் அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தம்
இரண்டு வருடத்திற்கு பின்னர் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்திற்கு ஒரு நாள் கழித்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. முன்னதாக எகிப்தில் நடந்த மறைமுக பேச்சுவார்த்தைகள் டிரம்பின் 20 அம்ச அமைதி கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின. அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் டிரம்பின் முன்மொழியப்பட்ட போர்நிறுத்தத்திற்கான பணயக்கைதிகள் ஒப்பந்தத்தின் கட்டமைப்பில் பணியாற்றி வருகின்றனர். பேச்சுவார்த்தை முடிவில், காசா அமைதி ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தை எட்டியதாக இஸ்ரேலிய அதிகாரிகள், ஹமாஸ் மற்றும் மத்தியஸ்தர் கத்தார் ஆகியோர் உறுதிப்படுத்தினர். இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் காசாவில் இருந்து வெளியேறுவதும், பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றமும் அடங்கும் என்று கூறியுள்ளது.
காலக்கெடு
72 மணி நேரத்திற்குள் பணையக்கைதிகள் பரிமாற்றம் நடக்கும்
AFP செய்தி நிறுவனத்தின்படி, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த 72 மணி நேரத்திற்குள் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் நடக்கும். இரு தரப்பிலிருந்தும் முறையே, உயிருடன் உள்ள அனைத்து பணயக்கைதிகளும், கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இந்த வார இறுதியில் உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தையாளர்கள் காசாவின் எதிர்கால நிர்வாகம் அல்லது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி கட்டமைப்பின் ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்த ஹமாஸின் இராணுவமயமாக்கல் பற்றிய கேள்வி போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீர்க்கப்படாத இந்த விஷயங்களைத் தீர்க்க எகிப்தில் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், அவை ஒப்பந்தத்தின் அடுத்த கட்டங்களை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.