Loading...
'நாடு உங்களுக்கு தலைவணங்குகிறது!' பென் குரியன் விமான நிலைய ஓய்வறைக்கு இந்திய விமானி பெயர்; இஸ்ரேலிய எம்பி முன்மொழிவு
பென் குரியன் விமான நிலைய ஓய்வறைக்கு இந்திய விமானி பெயர் வைக்க இஸ்ரேல் எம்பி முன்மொழிவு

'நாடு உங்களுக்கு தலைவணங்குகிறது!' பென் குரியன் விமான நிலைய ஓய்வறைக்கு இந்திய விமானி பெயர்; இஸ்ரேலிய எம்பி முன்மொழிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
03:38 pm

செய்தி முன்னோட்டம்

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற பிளைதுபாய் விமானத்தில், இணை விமானி நடத்திய தீவிரவாதத் தாக்குதலையும் மீறி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் நாடு தனது மிக உயரிய மரியாதையை செலுத்த தயாராகி வருகிறது . இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் கூடும் போது, அந்நாட்டின் முதன்மை விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு சிறப்பு ஓய்வறைக்கு கேப்டன் ஸ்மித் மச்சாரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்மோக் கோஹன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அதிபரின் நெகிழ்ச்சியான பாராட்டு

"இஸ்ரேல் நாடு உங்களுக்குத் தலைவணங்குகிறது, கேப்டன் மச்சார்!" என்று குறிப்பிட்ட அல்மோக் கோஹன், மனித உயிர்களைக் காப்பாற்றுவதே மிக உயரிய மதிப்பு என்பதை ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினர் அவருக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக பாராட்டினார்.

இதேபோன்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், "கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்த நிலையிலும், அவர் எதிர்த்துப் போராடி காக்பிட் கதவைத் திறந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அவர் ஒரு உண்மையான ஹீரோ" எனப் புகழாரம் சூட்டினார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக், மச்சாருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கைகோர்த்த மக்கள்

இந்திய, இஸ்ரேலிய மற்றும் எமிராட்டி மக்களின் இணைந்த வீரம்

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காக்பிட்டில் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கதவைத் திறந்து பயணிகளை உள்ளே வரவழைத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார், அவரைத் தடுக்க முயன்ற இஸ்ரேலியப் பயணிகள் மற்றும் எமிராட்டி (ஐக்கிய அரபு அமீரகம்) ஊழியர்கள் என வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்டு 174 உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்த உதவிய 4 இஸ்ரேலிய பயணிகளுக்கு குடியரசுத் தலைவரின் சிவிலியன் வீரதீர விருது வழங்க அதிபர் ஹெர்ஸாக் பரிந்துரை செய்துள்ளார்.

ADVERTISEMENT

தூதரக உதவி

தபூக் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் இந்தியத் தூதரக உதவி

நடுவானில் 34,000 அடியிலிருந்து 17,000 அடிக்கு விமானம் சரிந்து விழுந்த போதிலும், மச்சாரின் சாதுரியத்தால் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

படுகாயமடைந்த ஸ்மித் மச்சாருக்கு தபூக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகச் சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தூதரகம் உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேலிய நாடாளுமன்றச் சபாநாயகர் அமிர் ஓஹானா, ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டானி டானான் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT