சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு
சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவின் தலைவர், அபு அல்-ஹுசைன் அல்-குராஷி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இட்லிப் மாகாணத்தில் ஜிஹாத் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த நேரடி மோதல்களுக்குப் பிறகு, தலைவர் அபு அல்-ஹுசைன் அல்-குராஷி கொல்லப்பட்டார் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டெலிகிராம் சேனலில் அறிவித்துள்ளார். எனினும், அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது போன்ற கூடுதல் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக, அபி ஹஃப்சன் அல்-ஹாஷிமி அல்-குராஷி நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம்
அமெரிக்க படைகள், 2011இல் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேறியதும், அங்கு நிலவிய அரசியல் நிலையற்ற தன்மையும், தீவிரவாதிகள் வளர்வதற்கு சாதமாக அமைந்தன. குறிப்பிடத்தக்க வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த சில தீவிரவாத குழுக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 2014இல் ஈராக் மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் எடுத்து, தனியாக கலீபாவை அமைத்து ஆட்சி செய்தனர். எனினும், அமெரிக்க உதவியுடன் ஈராக் 2017இல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதியை மீட்டெடுத்தது. பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிரியாவிலும் அந்த இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அந்த அமைப்பின் ஸ்லீப்பர் செல்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன.