மனஅழுத்தத்திற்காக மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்?
மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களுக்காக, 'கீட்டாமின்' என்ற மருந்தை எலான் மஸ்க் எடுத்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், எலான் மஸ்க் மட்டுமல்லாது, கூகுளின் நிறுவனரான, செர்கே பிரின் உள்ளிட்ட சிலிக்கான் வேலியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளும் குறிப்பிட்ட அரிய வகை போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த போதை பொருட்களை வெறும் போதைக்காக மட்டுமல்லாமல், படைப்பாற்றலை அதிகரிக்கவும், கவனச்சிதறலைத் தடுக்கவும் அவர்கள் பயன்படுத்துவதாக தெரிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எலான் மஸ்க் பயன்படுத்துவதாகக் கூறும் கீட்டாமின் என்ற மருந்தை, மயக்க மருந்தாக பிற நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்:
அமெரிக்க தனியார் நிறுவனத்தின் அந்த செய்திக் குறிப்பில், எலான் மஸ்க் மேற்கூறிய கீட்டாமின் என்ற மருந்தே மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதை தாங்களே கண்டிருப்பதாகச் சிலரும், எலான் மஸ்க் தங்களுக்கும் அதனைப் பரிந்துரைத்ததாகச் சிலரும் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த செய்திக்குறிப்பு வெளியான பின்பு எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவிலும், 'அமெரிக்காவில் மனஅழுத்தம் அதிகரித்து வருகிறது. கீட்டாமின்னை அவ்வப்போது எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வு தான்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், எலான் மஸ்க் பலமுறை நேர்காணல்களின் போதும் பிற சமயங்களிலும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து நகைச்சுவையான கருத்துக்களைத் தெரிவிப்பதுண்டு.