LOADING...
வளைகுடாவை விட்டு வெளியேறுமா அமெரிக்கா? ஈரானின் அதிரடி நிபந்தனைகளும், ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டமும்
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளன

வளைகுடாவை விட்டு வெளியேறுமா அமெரிக்கா? ஈரானின் அதிரடி நிபந்தனைகளும், ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டமும்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2026
09:29 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. இது அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று, ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்போ, போர் நிறுத்தத்தினை கோரி ஈரான் ஒரு மிகப்பெரிய விட்டுக்கொடுத்தலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மறுபுறம் ஈரான் போர் நிறுத்தத்தை கோரவில்லை எனவும் கூறுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்காக ஈரான் நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும், அமெரிக்கா அமைதி திட்டத்தை வகுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிபந்தனை

ஈரானின் அதிரடி நிபந்தனைகள்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, ஈரான் தனது நிபந்தனைகளை மண்டல மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்குத் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: 1. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் உடனடியாக மூட வேண்டும். 2. போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும். 3. சுயஸ் கால்வாய் போல, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஈரானுக்கு வழங்க வேண்டும். 4. அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும் மற்றும் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனைகளை "யதார்த்தமற்றவை மற்றும் நகைப்புக்குரியவை" என அமெரிக்க அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அமைதித் திட்டம்

அதிபர் ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டம்

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். யுரேனியம் செறிவூட்டலைத் தடுத்து, தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச சுதந்திர வர்த்தகப் பாதையாகத் திறக்க வேண்டும். பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது. இவற்றிற்கு ஈரான் ஒப்புகொள்ளுமா என்பது கேள்விக்குறியே!

Advertisement

தாக்குதல்கள்

தற்போதைய நிலை

ராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், போர்க்களத்தில் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் சிலர் காயமடைந்த நிலையில், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை ஈரானில் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா தனது 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த 3,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பத் தயாராகி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த முன்வந்துள்ளதும், ஹார்முஸ் ஜலசந்தியில் "பகையற்ற கப்பல்களை" அனுமதிக்க ஈரான் சம்மதித்ததும் ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% வரை சரிந்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் தங்களது அடிப்படை நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால், இறுதி உடன்பாடு எட்டப்படுவது சவாலாகவே உள்ளது.

Advertisement